கீழக்கரை செப், 15
செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபா மற்றும் நகர் சபா கூட்டங்கள் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக கீழக்கரை நகராட்சி சார்பில் இன்று காலை முதல் கட்டமாக 1,2,7,8,9,12,13,14,15,16,17 ஆகிய 11 வார்டுகளுக்குமான நகர் சபா கூட்டம் 1வது வார்டுக்குட்பட்ட மைஃபா சங்கத்தின் அருகில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொண்டனர்.ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்று அல்லது இருவர் மட்டுமே கலந்து கொண்ட காட்சியை காண முடிந்தது.
ஒவ்வொரு வார்டுக்கும் நகர் சபா நிர்வாகிகள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான சபா நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
8 வது வார்டு கவுன்சிலர் MMK காசீம் கூறும் போது:-
எனது வார்டு சபா நிர்வாகிகள் இங்கு கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருப்பதாகவும், ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதே இதற்கு காரணம் என்றார்.
சமூக நல ஆர்வலர் கிரௌன் ஹுசைன் 17 வது வார்டு கவுன்சிலரோ அதன் சபா நிர்வாகிகளோ இதுவரை இந்த கூட்டத்திற்கு வராமல் இருப்பதை தாம் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
இவரது வெளிநடப்புக்கு பிறகு 17வது வார்டு கவுன்சிலர் பயாஸ்தீன் மிகவும் காலதாமதமாக கூட்டத்திற்கு வருகை தந்தது அனைவரின் முகமும் சுளிக்க வைத்தது.
நகர் சபா கூட்டம் நடைபெறும் தகவல் மக்களிடையே போய் சேராததற்கு போதிய கால அவகாசம் வழங்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மொத்தம் 11 வார்டுகளுக்கான குறை தீர் கூட்டத்தில் அதிகாரிகளும் கவுன்சிலர்களும் தான் அதிகமாக கலந்து கொண்டனர்.பொதுமக்களோ?நகர் சபா நிர்வாகிகளோ? அதிகமாக கலந்து கொள்ளவில்லை என்பதை அங்கிருந்த காலி இருக்கைகள் மெய்படுத்தின.
இனிவரும் காலத்திலாவது போதிய அவகாசம் கொடுத்து மக்களை கலந்து கொள்ள செய்தால் மட்டுமே மக்களிடமிருந்து குறைகளை பெற்று அதற்கான தீர்வையும் காணமுடியும்.
அரசு அறிவித்த நகர் சபா கூட்டத்தின் நோக்கம் இன்றைய கீழக்கரை கூட்டத்தில் நிறைவேறவில்லை என்பதே பொதுவான பார்வை.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.