கீழக்கரை செப், 14
கீழக்கரை நகராட்சி கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் தலைமையில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கீழக்கரையின் அடிப்படை கட்டமைப்புகள், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.
கீழக்கரை வர்த்தகர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான விமான நிலையம் வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது ஏதேனும் புகார் வந்தால்…என்னிடம் கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்க கூடாது என நகர்மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தார்.
கீழக்கரையில் பணியாற்றும் அதிகாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் நகர்மன்ற தலைவர் கூறினார். இதற்கு சமூக நல ஆர்வலர் கிரௌன் ஹுசைன் அரசு திட்ட பணிகளை முறையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ளாத பட்சத்தில் பொறுப்பற்ற அவர்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியரிடம் புகாராக கொடுக்கப்படுகிறது என விளக்கமளித்தார்.
சமூக நல ஆர்வலர் பாசித் இல்யாஸ் கூறும் போது, வடக்குத்தெரு நீர் நிலை தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான சூழல் இருப்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
கீழக்கரை நுகர்வோர் நல சங்கத்தின் செயலாளர் செய்யது இப்றாகீம் கூறும்போது, போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்வதற்கான போதிய போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்றார்.மின் பயனீட்டு அளவினை ரீடிங் எடுக்க வருவோர் உரிய காலத்திற்குள் எடுக்காமல் தாமதமாக எடுப்பதால் கூடுதல் கட்டணம் செலுத்தும் அதிக சுமை மக்களிடம் திணிக்கப்படுவதால் அதனை சரிசெய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் மின் அளவீட்டு பணியை செய்ய வேண்டுமென மக்கள் டீம் காதர் கோரிக்கை வைத்தார்.
ஊருக்குள் வராமல் முக்குரோடு வழியாக செல்லும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை வந்து செல்லவேண்டும், அரசு நூலகம் அமைத்திட வேண்டும், முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அலுவலகத்தின் கிளையை கீழக்கரைக்குள் அமைத்திட வேண்டும், அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உள்வாங்கி கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்னுபாலசந்திரன் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படுமென்றார்.
மேலும் கீழக்கரையில் நாளொன்றுக்கு 10 டன் குப்பைகள் சேகரிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு குறைவாகவே குப்பை சேகரிக்கப்படுவதாக தாம் கருதுவதாகவும் மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து கொடுக்கும் பணியினை பொதுமக்களே தத்தம் வீடுகளில் செய்து குப்பை சேகரிக்க வருவோரிடம் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தாசில்தார் பழனிக்குமார், ஆணையர் செல்வராஜ், துணை நகர் மன்ற தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், கீழக்கரை வெல்ஃபேர் கமிட்டி தலைவர் சாகுல்ஹமீது ஆலிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.