Spread the love

சென்னை ஆகஸ்ட், 19

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இவ்வகை சூதாட்டங்கள் குறித்தும் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அறிக்கை தாக்கல் அதன்படி, இந்தக்குழு ஆய்வு செய்து 700 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அதேவேளையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து பொதுமக்கள், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி பொதுமக்கள் பலர் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் சமர்ப்பித்தனர்.

அதேபோன்று ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன. முதலமைச்சர் ஆலோசனை இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திரரெட்டி, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சட்டத்துறை செயலாளர்கள் கார்த்திகேயன் கோபி ரவிக்குமார் சட்டம் இயற்றல் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *