நெல்லை ஆகஸ்ட், 16
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் ஏற்பாட்டில், திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவு கால் இறுதி போட்டியை ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, அப்புவிளை மகேசுவரன் ஆகியோர் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தனர். பெண்கள் பிரிவு போட்டியை ராதாபுரம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வாழவந்தகணபதி, பொன் மீனாட்சி அரவிந்தன், சாந்தா மகேசுவரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா சிஐஎஸ்எப். அணியை சென்னை வருமான வரித்துறை அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் ஹரியானா அணியை வீழ்த்தி ஐதராபாத் சவுத் சென்டிரல் ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் சுழற்கோப்பை பரிசு வழங்கினர். ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய குழு துணைத்தலைவர் இளையபெருமாள், முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், சாலமன் டேவிட், இசக்கிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.