இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை மேற்கொள்வார்கள். இந்த நோன்பு காலத்தில் உண்ணாமல், நீர் அருந்தாமல், எச்சில் கூட விழுங்காமல், தீய பழக்கங்கள் இல்லாமல் இஸ்லாமியர்கள் மிகவும் கடுமையாக விரதம் இருப்பார்கள். இந்த நோன்பானது இஸ்லாமியர்களின் 5 அடிப்படை கடமைகளில் ஒன்றாகும்.
இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை மேற்கொள்வார்கள். இந்த நோன்கு காலத்தில் இரண்டு வகையான உணவுகளை இஸ்லாமியர்கள் உண்பார்கள். அவை சஹர் மற்றும் இஃப்தார். இதில் நோன்பு திறக்கும் முன் சாப்பிடும் உணவு தான் சஹர் என்று அழைக்கப்படுகிறது. அதாவது இது சூரிய உதயத்திற்கு முன் சாப்பிடும் உணவு.
இந்த உணவின் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது அவசியம். இப்போது சுகூர் உணவின் போது இஸ்லாமியர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொண்டால் நாள் முழுவதும் உடல் போதுமான ஆற்றலுடனும், நீரேற்றத்துடனும் இருக்கும் என்பதைக் காண்போம்.
முட்டையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. முட்டைகளை உண்பதனால், வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும். முட்டைகளை ஒருவர் பலவாறு உணவில் சேர்க்கலாம். அவை காய்கறிகளை சேர்த்து ஆம்லெட்டுகளாக தயாரித்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், முட்டைகளை வேக வைத்து, அவற்றை சாப்பிடலாம்.
ஓட்ஸில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்கும். இந்த ஓட்ஸ் உடன் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து ஸ்மூத்தியாக தயாரித்து குடித்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். விருப்பமிருந்தால், அத்துடன் சிறிது நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மீனில் புரோட்டீன் அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய சில முக்கியமான சத்துக்களும் உள்ளன. இந்த சத்துக்களைப் பெற மீன்களை எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல், குழம்பாக தயாரித்து சாப்பிட வேண்டும். ஏனெனில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டால், அது அதிக தாகத்தை ஏற்படுத்தும்.
அதேப் போல் சிக்கனிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது காலையில் வேகமாக சமைத்து சாப்பிட ஏற்றது. அதற்கு இந்த சிக்கனை கிரேவி, மசாலா என்று செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒருவரை ஆற்றலுடன் வைத்துக் கொள்ள தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மேலும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள, வெறும் நீரை மட்டும் குடிக்காமல் பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, பீச், ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரிக்காய், லெட்யூஸ், பசலைக்கீரை மற்றும் செலரி போன்றவற்றை அதிகம் உண்பது நல்லது.
நட்ஸ்கள் ஒரு நல்ல ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். அதுவும் இந்த பலவிதமான நட்ஸ்களை பொடித்து, அதை பாலுடன் சேர்த்து சஹர் உணவின் போது உட்கொண்டால், வயிறு நிரம்புவதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். வேண்டுமானால் பாதாம் பட்டர் மற்றும் வேர்க்கடலை பட்டர் போன்றவற்றையும் கோதுமை பிரட்டில் தடவி உட்கொள்ளலாம்.
முக்கியமாக சஹர் கால உணவை உண்ணும் போது, உணவுகளை நன்கு மென்று பின் விழுங்க வேண்டும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். மேலும் நோன்பு காலத்தில் அதிக உடலுழைப்பில் ஈடுபட வேண்டாம். இல்லாவிட்டால் விரைவில் சோர்வடைந்து விடுவதோடு, பசி எடுக்கவும் ஆரம்பித்துவிடும்.