தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. திடீரென்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, அதன் விளைவாக உடல் சூட்டு பிரச்சனையை நிறைய பேர் எதிர்கொள்வதுண்டு. மேலும் கடுமையான வெயிலின் போது அதிக தாகம் எடுக்கும் மற்றும் உடல் வறட்சியடையும். இந்நிலையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரிழப்பின்றியும் வைத்துக் கொள்ள பல்வேறு இயற்கை பானங்கள் உதவிபுரிகின்றன. அவற்றில் ஒன்று தான் மோர். தயிரைக் கொண்டு தயாரிக்கப்படும் மோரில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
முந்தைய காலத்தில் எல்லாம் மோரைத் தான் மக்கள் அதிகமாக குடித்து வந்தார்கள். அதன் காரணமாகத் தான் என்னவோ, அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கிய பிரச்சனைகளின்றி வாழ்ந்து வந்துள்ளார்கள். 100 மிலி மோரில் 40 கலோரிகள் உள்ளன. மேலும் இதில் கொழுப்புக்கள் குறையு மற்றும் பாலை விட குறைவான கலோரிகளையே கொண்டுள்ளன. முக்கியமாக இதில் புரோட்டீன் மற்றும் கால்சியம் வளமான அளவில் உள்ளன மற்றும் சோடியம், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் மோரில் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய மோரை ஒருவர் தினமும் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
மோர் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிப்பதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் மோருடன் சீரகம், புதினா, சிறிது உப்பு போன்றவற்றை சேர்த்து வெயில் காலத்தில் குடிக்கும் போது, அது தாகத்தை தணிக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உடல் அதிக சூடாக இருப்பதை உணர்ந்தால், தினமும் மோர் குடித்து வாருங்கள்.
தயிர் மற்றும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் மோரில் 90 சதவீதம் நீரும், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளன. எனவே உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் பராமரிக்க விரும்பினால், மோரை தினமும் குடித்து வாருங்கள். முக்கியமாக மோரை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு, நீரிழப்பு பிரச்சனையே வராது.
மோர் நமது செரிமான மண்டலத்திற்கு மிகவும் அற்புதமான பானம். மோரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மற்றும் லாக்டிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுவதோடு, நமது மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் மோர் குடலியக்கத்தைப் பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினமும் மோர் குடித்து வந்தால், அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக மோரை தினமும் குடித்து வருவதன் மூலம், வயிற்றில் ஏற்படும் தொற்றுகள் குடல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கலாம்.
ஆற்றலை அதிகரிக்கிறது
மோரை தினமும் குடிப்பதன் மூலம், உடலின் ஆற்றல் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். உடலில் ஆற்றலை உற்பத்தை செய்வதற்கு ரிபோஃப்ளேவின் என்னும் பி வைட்டமின்கள் மிகவும் இன்றியமையாதது. இந்த பி வைட்டமின்கள் மோரில் உள்ளன.
எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது
மோரில் கால்சியம் அதிகளவில் உள்ளன. அதுவும் 100 மிலி மோரில் 116 மிகி கால்சியம் உள்ளது. கால்சியம் நமது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாதது. ஆகவே மோரைக் குடிப்பதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும். மேலும் கால்சியமானது இரத்த உறைதலுக்கும், தசைகளின் சுருக்கத்திற்கும், இதய துடிப்பிற்கும் அவசியமான சத்தாகும்.
அசிடிட்டி
எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை உட்கொண்டு அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் மோரில் உள்ள லாக்டிக் அமிலம், வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்குகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
மோரை தினமும் குடித்து வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
மோரை தினமும் குடித்து வருவதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். எனவே இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் மோரை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருவது நல்ல பலனை அளிக்கும்.
நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது
மோரை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களில் இருந்து உடல் பாதுகாப்பாக இருக்கும். சுருக்கமாக கூற வேண்டுமானால், தினமும் மோர் குடித்தால், அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம்.
மேலும் எடை இழப்பிற்கு உதவும்
மோரில் புரோட்டீன்கள், வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாகவும் உள்ளன. ஆகவே மோரை தினமும் குடிக்கும் போது, உடல் ஆற்றல் நிறைந்து இருப்பதோடு, நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். இதன் விளைவாக ஜங்க் உணவுகளின் மீதான நாட்டமும் குறையும். ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு மோர் ஒரு சிறந்த பானமாகும்…