Spread the love

கீழக்கரை ஜன, 24

ராமநாதபுரம் மாவட்டம் இன்று காலை 11.30 மணிக்கு கீழக்கரை நகர்மன்ற சிறப்பு கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

முதல் தீர்மானத்தில் ஊரில் குப்பைகளை அகற்றுவதற்கும்,தெருக்களை துப்புரவு செய்வதற்கும் மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு 1003.35 லட்சத்தில் ஒதுக்கீடு செய்யப்படுவது மற்றும் நகராட்சி தெரு மின்கம்பங்களுக்கு தேவையான இரண்டு லட்சம் மதிப்பில் பல்புகள் கையிருப்பு வைப்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் போது நிரந்தர அரசு தூய்மை பணியாளர்களாக இருக்கும் 27 பேரின் எதிர்காலம் குறித்து எதுவும் பேசப்படாதது குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

8வது வார்டு கவுன்சிலர் MMK.காசீம் பேசுகையில் எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் நகராட்சி அனுமதியின்றி பொதுப்பாதையில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் வாசல்படியை இடித்துள்ளீர்கள்.வார்டு கவுன்சிலர் என்ற முறையில் இடிக்கப்படும் தகவலை எனக்கு தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

எந்தவொரு ஆக்கிரமிப்பையும் இடிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா பேசும் போது, இனி வரும் காலங்களில் எங்கள் வார்டில் பொதுபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து யார் வாசல்படி கட்டினாலும் அதனை நகராட்சி அதிகாரிகள் இடிக்கும் போது நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதென எங்களின் முஸ்லிம் வாலிபர்கள் முன்னேற்ற சங்கம்(MYFA) தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக கூறினார்.

கீழக்கரையில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்போர் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் கொடுத்து நிலுவை வரி வசூலுக்கு கவுன்சிலர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.

வரி வசூல் செய்யாமல் இத்தனை காலம் தாமதம் செய்தது யார்? நகராட்சி பணியாளர்கள் வசூல் செய்யாமல் அதனை கவுன்சிலர்கள் தலையில் சுமையேற்றுவது ஏற்புடையதல்ல என்று 17வது வார்டு கவுன்சிலர் தாஜுன் அலிமா குற்றம் சாட்டினார்.

வார்டு குளறுபடியாக இருக்கும் போது எந்த கவுன்சிலர் எந்த வார்டில் போய் வரி வசூல் செய்வது குறித்து மக்களிடம் அறிவுறுத்த முடியும்?முதலில் வார்டு குளறுபடிகளை சரி செய்யுங்கள் பிறகு நிலுவை வரியை வசூலிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று 1வது வார்டு கவுன்சிலர் பாதுஷா கூறினார்.

வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி கோரும்போதே பொது பாதையில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எழுதி வாங்க வேண்டுமென்று 19வது வார்டு கவுன்சிலர் மூர் நவாஸ் கூறினார்.

வார்டு குளறுபடிகளை எப்போது சரி செய்வீர்கள் என்று நகராட்சி ஆணையரிடம் நாம் கேட்டபோது அரசின் அனுமதி பெற்று இரண்டு மாத காலத்திற்குள் வார்டு குளறுபடிகளை சரிசெய்து விடுவோமென்றார் ஆணையர் செல்வராஜ்.

திமுக,அதிமுக,கம்யூ,அசகூ,SDPI சக்கினா பேகம் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *