மதுரை நவ, 24
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்வார்கள். அதே போல் சபரிமலைக்கு செல்லும் போதும், சபரிமலையில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போதும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வார்கள்.
இதனால் சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ள ஊர்களில் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும். மதுரைக்கும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதில் இருந்தே மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி, மாசி வீதிகளில் காலை முதல் இரவு வரை அய்யப்ப பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர். அவர்கள் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் சுவாமி படங்கள், பூஜை பொருட்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் மதுரையில் உள்ள கடைகளில் சபரிமலை சீசன் விற்பனை அதிகரித்துள்ளது.