பெரம்பலூர் நவ, 22
பெரம்பலூர் ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமல்லாது நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான ஆவணமாக திகழ்கிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுக்கான மத்திய அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஆதார் அட்டைதாரர்கள் தாங்கள் ஆதார் எண் பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்து இருந்தால், தற்போதைய புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், தற்போதைய முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும். ஆதார் தரவுகளை புதுப்பித்திடுவதன் வாயிலாக, மத்திய சேமிப்பகத்தில் ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக பதிவில் இருப்பதை உறுதி செய்ய முடியும். ஆனால் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கோரி தொலைபேசி வாயிலாக வரும் எந்தவித அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பொதுமக்கள் எவரும் பதிலளித்து தங்கள் ஆதார் விவரங்களை தர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.