ராமநாதபுரம் அக், 20
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கக் கூடிய இடங்களாக இருக்கக்கூடிய தனுஷ்கோடி, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோயில், ராமர் பாதம், அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தப் பின்னர், பாம்பன் சாலை பாலத்தில் இருந்து கடல் அலையை ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாகனங்களை சாலைப் பாலத்தின் இரு புறங்களின் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அவ்வப்போது பாலத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் நேர்ந்து வருகிறது
இந்நிலையில்,ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், இன்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்ததில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த வாரம் இதேபோன்று பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து பாலத்தின் தடுப்பு மீது மோதி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.