மேலூர் நவ, 17
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுக்கடைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில் மதுக்கடை தொடங்க திட்டமிட்டிருந்த கட்டிடத்தில் இரவோடு இரவாக மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள் மேலூர்-அழகர்கோவில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்லியாஸ் ரெபோனி, துணை ஆய்வாளர் ஜெயம் பாண்டியன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் வட்டாட்சியர் சரவணபெருமாளும் பழைய சுக்காம்பட்டி கிராமத்திற்கு வந்தார். வட்டாச்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதில் சமரசம் அடைந்த கிராம மக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.