நாமக்கல் அக், 19
குமாரபாளையம், கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும்நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் வசித்த சுமார் 150 குடும்பங்களை சேர்ந்த 485-க்கு மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குமாரபாளையம் பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் ரப்பர் டியூப்பில் மிதவை ஜாக்கெட்டுகள் மற்றும் கயிறுகள் ஆகியவைகளை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 34 வீரர்கள் குமாரபாளையத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சென்று தாழ்வான பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் வீடுகளை பார்வையிட்டனர்.