நாகர்கோவில் அக், 12
கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அளித்த உரையில், தமிழக அரசு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் துணை ஆட்சியர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்ஆனந்த் மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.