Spread the love

நாமக்கல் செப், 26

ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் இதுவரை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மல்பெரி சாகுபடி நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சி துறையின் கீழ் ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பரமத்தி, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் 1,304 பட்டு விவசாயிகள் 2459 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் வரை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை தங்களது சொந்த செலவில் ஒவ்வொரு மாதமும் சேலம், தர்மபுரி, கோவை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ராம் நகரில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை இருந்தது.

இந்த நிலையில் முதலமைச்சரின் நடவடிக்கையால் ராசிபுரம் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை அங்காடி திறக்கப்பட்டு 2021-ம் ஆண்டு முதல் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த அங்காடியில் பட்டுக்கூடு கொள்முதல் செய்ய வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பட்டு நூற்பாளர்கள் வருகை தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடியில் 23.9.2022 வரை நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 650 பட்டு விவசாயிகள் 96.804 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகளை ரூ.5 கோடியே 18 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர் என‌ அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *