பரமக்குடி செப், 11
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருபவர்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தில் தான் வரவேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, பட்டாசு வெடிக்க கூடாது, காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், கோஷங்களை எழுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் பரமக்குடி நகரில் பாதுகாப்பு பணியினை கண்காணிக்கவும் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 70 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள், இது தவிர காவல்துறை சார்பில் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் பயமின்றி அஞ்சலி செலுத்துவதற்காக தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரகார்க் தலைமையில் 3 காவல் துறை துணைத் தலைவர் தலைமையில் 23 காவல் கண்காணிப்பாளர், 27 காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 60 காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் என 5 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.