திண்டுக்கல் ஆகஸ்ட், 1
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மேல்பகுதிக்கு செல்வதற்காக மின்இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன.
இதில் ரோப்காரில் நகரின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை ரசித்தபடியும், விரைவாகவும் மலைக்கோவிலுக்கு செல்ல முடிவதால் ரோப்காரில் பயணம் செய்வதையே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகின்றனர். இந்த ரோப்காரில் பக்தர்கள் பாதுகாப்புக்காக தினசரி, மாதம் ஒருமுறை மற்றும் ஆண்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி, கடந்த ஜூன் 16-ம்தேதி தொடங்கியது. இதையொட்டி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், கம்பிவடம், ரோப்கார் பெட்டிகள், எந்திரங்கள் ஆகியவற்றை கழற்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கம்பிவடம், பற்சக்கரங்கள், ‘சாப்ட்’ கள் மற்றும் இதர உதிரி பாகங்களின் உறுதிதன்மை சோதிக்கப்பட்டன. இதில் ரோப்காரில் உள்ள ‘சாப்ட்’ கள் தேய்மானம் அடைந்திருந்ததால், அவற்றை அகற்றி புதிய ‘சாப்ட்’ களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சத்தில் புதிய ‘சாப்ட்’ வாங்கப்பட்டுள்ளது.
தற்போது ரோப்கார் நிலையத்தில் அவை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் பக்தர்களுக்காக மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்படும். இதுபற்றி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோப்காரில் பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புதிய ‘சாப்ட்’ பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது நிறைவு பெற்றவுடன் ரோப்கார் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். பின்னர் பக்தர்களின் பயன்பாட்டுக்கு மீண்டும் ரோப்கார் சேவை கொண்டுவரப்படும் என்றார்.