கீழக்கரை ஜூலை, 6
ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தெரு குழாய்களும் உண்டு.
இந்நிலையில் கடந்த 12 நாட்களாக காவிரி குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து விசாரித்த போது வடக்குத்தெரு கொந்தன்கருணை தர்ஹா வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஒரு வார காலமாகும் என்கின்றனர் நகராட்சி ஊழியர்களில் சிலர்.
ஒரு தொட்டியை இடிப்பதற்கு முன்பு குடிநீர் வினியோகம் தடையின்றி தொடர்வதற்கான மாற்று வழியை உருவாக்கிய பின்னர் தானே பழைய குடிநீர் தொட்டியை இடித்திருக்க வேண்டும் என கேட்கின்றனர் பொதுமக்கள்.
எவ்வித முன்னேற்பாடுமின்றி மக்களுக்கு குடிநீர் வினியோகத்தை வார கணக்கில் தடை செய்தால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? என்று கூடவா நகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாமல் போகும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
பொதுமக்களின் அவதியை கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் லாரி மூலம் குடிநீர் வழங்கிட வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்