மதுரை ஜூலை, 31
மதுரை சி.பி.எஸ்.இ. பொது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில், மதுரை குயின்மீரா பள்ளி மாணவர்கள், தேசிய தர வரிசையில் மாநில அளவில் 3-ம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து, பள்ளியின் தலைவர் சந்திரன், நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன், கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு தேர்வில் குயின்மீரா பள்ளியை சேர்ந்த மாணவிகள் திவ்யாஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுபோல் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சிவபாக்யா 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் விகிதம் 10-ம் வகுப்பில் 85 சதவீதமாகவும், 12-ம் வகுப்பில் 82 சதவீதமாகவும் உள்ளது. தரவரிசை மற்றும் மதிப்பெண்களை மட்டுமே பள்ளியின் நோக்கமாக வைத்து கொள்வதில்லை. சாதனை படைத்த மாணவர்கள், படிப்பில் மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றிக்கு முழு காரணம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கடின உழைப்பே ஆகும். மாநில, மாவட்ட அளவில் மாணவர்களை சாதிக்க தூண்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.