கீழக்கரை மே, 24
கீழக்கரை நகர் முழுவதும் மிகவும் குறுகலான பாதைகளும் சந்துகளுமாய் போக்குவரத்துக்கு மிகுந்த நெருக்கடியை தந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொஞ்சம் அகலமான பாதைகள் இருக்கும் ஒருசில பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவோர் பொதுபாதைகளில் வாசல்படியை உயர்த்தியும் ரோட்டில் இழுத்தும் வைத்து கட்டுகின்றனர்.
கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் போது வாசல்படியை அவரவரின் சொந்த இடங்களில் தான் வைக்க வேண்டுமென்ற உத்தரவாத நிபந்தனையை படிவங்களில் குறிப்பிட்டிருந்தாலும் பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்யும் கட்டிட உரிமையாளர்களின் மீது கீழக்கரை நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதனால் 20 அடி பாதைகளும் கூட தற்போது 8 அடி பாதைகளாக சுருங்கி காணப்படும் அவலநிலை நீடிக்கிறது.
நகராட்சி ஆணையரின் நடவடிக்கையோ பூஜ்ஜியமாக உள்ளதென சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.உடனடியாக நகராட்சி ஆணையரை பணியிட மாறுதல் செய்து பொதுபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், வாசல்படிகளை இடித்து அப்புறப்படுத்தக்கூடிய ஆளுமையான ஆணையரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்.