திருவண்ணாமலை ஏப்ரல், 23
அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்களும், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பெளவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பெளர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். சாமி தரிசனத்துக்கு பின்னர் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். பெளர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இந்த ஆண்டுக்கான சித்ரா பெளர்ணமி திருவிழா இன்றும் நாளையும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் கூறுகையில், சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,820 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
கிளாம்பாகக்த்திலிருந்து இன்று 628 பேருந்துகளும், மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும், தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும், தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.