மதுரை ஆக, 25
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து,
தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும் என நீதிபதி கூறினார்.