‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான கண்ணனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழின் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமி, 1987ல், ‘காலச்சுவடு’ எனும் காலாண்டு இதழை தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் அது நிறுத்தப்பட்டது. அவரின் மகன் கண்ணன் சுந்தரம், அதே இதழை, 1994ல் மீண்டும் துவக்கினார். படிப்படியாக அது மாத இதழானது. தீவிர இலக்கியம், சுற்றுச்சூழல், பெண்ணியம், மொழிபெயர்ப்பு உள்ளிட்டவை இதழில் வெளியாகின்றன.
அதேநேரம், ‘காலச்சுவடு’ எனும் பெயரில் பதிப்பகமும் இயங்குகிறது. அது, இலக்கியம், சுற்றுச்சூழல், மொழிபெயர்ப்பு சார்ந்த நுால்களை பதிப்பித்து வருகிறது. இந்த பதிப்பகத்தை, நாகர்கோவிலில் இருந்து, கண்ணன் நடத்தி வருகிறார். பிரான்ஸ் நாட்டுடன், இந்தியாவுக்குமான நட்பு, கலாசாரம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில், மொழிபெயர்ப்பு நுால்களை வெளியிட்டதற்காக, கண்ணனுக்கு, செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து ஏற்கனவே, நடிகர்கள் சிவாஜி, கமல், மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோர், இந்த விருதை பெற்றுள்ளனர்.இந்த விருது, வரும் செப்டம்பரில், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரின் வீட்டில் நடக்கும் நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.