கீழக்கரை டிச, 12
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் லேசாக பெய்த மழையால் ஆங்காங்கே குளம் போல் நீர் தேங்கியிருப்பதும் அதில் கொசு உற்பத்தியாவதும் அதன் மூலம் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவுவதுமாய் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் கஸ்டம்ஸ் ரோட்டில் சமீபத்தில் குண்டும் குழியுமாய் இருந்த சாலையை ஃபேவர் பிளாக் கற்கள் கொண்டு சரி செய்தது நகராட்சி நிர்வாகம்.
திடீரென அந்த சாலையில் ஆங்காங்கே கற்கள் பெயர்க்கப்பட்டு குழிகளை உருவாக்கி வைத்துள்ளது நகராட்சி நிர்வாகம். இதுகுறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, ஏற்கனவே சாலை மோசமாக இருக்கும் போது இடையிடையே குழியை தோண்டி போட்டு நடந்து செல்வோருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினர்.
பொதுமக்களின் புகார் குறித்து நமது செய்தியாளர் வார்டு கவுன்சிலர் மூர் நவாஸை தொடர்பு கொண்டு கேட்ட போது, பேட்ச் ஒர்க் என்ற அடிப்படையில் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் மழை பெய்த காரணத்தினால் ஃபேவர் பிளாக் கற்கள் கிடைக்க தாமதமாகிறது, இரண்டொரு நாளில் கற்கள் வந்ததும் சாலையை சீரமைத்து கொடுத்து விடுவோம் எனக்கூறியுள்ளார்.
முக்கிய சாலையாக இருப்பதாலும் டிசம்பர் மாதம் அதிக திருமணங்கள் நடக்கும் சூழலில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சாலை என்பதாலும் நகராட்சி நிர்வாகம் துரித கதியில் செயல்பட்டு உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.