Spread the love

அக், 29

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *