Spread the love

அக், 18

இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது.

உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.

வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, அரிசியினால், கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.

இட்லி சாப்பிடுவது ஆரோக்கியம்தான். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். எண்ணெய், நெய், வெண்ணெய் தடவிய இட்லி, ஃப்ரைடு இட்லி இவையெல்லாம் அதிக கலோரி கொண்டவை. இவற்றை அதிகமாகச் சாப்பிடும்போது கலோரி அதிகமாக உடலில் சேரும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள பரிமாறப்படும் சட்னியிலும் கவனம் தேவை.

குறிப்பாக, தேங்காய் சட்னி. ஒரு சிறிய துண்டு தேங்காயில் (சராசரியாக 45 கிராம் எடையுள்ள) 159 கலோரிகளும், 15 கிராம் கொழுப்பும் உள்ளன. தேங்காயில் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சாப்பிடும்போது அதிகமான அளவில் கலோரிகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இட்லி மிளகாய்ப் பொடியில் எண்ணெய், நெய் அதிகமாக ஊற்றினால், இதுவும் அதிக கலோரி உடலில் சேரக் காரணமாகிவிடும்.

இதனோடு மெதுவடை சாப்பிடுவது பொருத்தமானது அல்ல. வடை, எண்ணெயில் பொரிக்கப்படுவது. அதிக கலோரிகளை உடலில் சேர்க்கக்கூடியது. வடையை மாலை நேரத்தில் லேசாக பசி வயிற்றைக் கிள்ளும்போது சாப்பிடலாம், தவறில்லை. காலையில் இட்லியுடன் வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *