கீழக்கரை செப், 20
ராமநாதபுரம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் அதற்கு பதிலாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இதுகுறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை 4.30 மணிக்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டி அவை தலைவருமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர்,உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க பொருளாளர் சதக் அப்துல் காதர், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் தலைவரும் உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க உறுப்பினருமான ஹாமீது இப்றாகீம், கீழக்கரை நகர்மன்ற முன்னாள் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்டோர் சிறப்புக் அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கழிவு நீர் நிலையம் அமைப்பதின் மூலம் கீழக்கரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளில் ஒன்றான வாறுகால் பிரச்சினையும் முடிவுக்கு வந்து விடுமென்றும் கீழக்கரையில் சுகாதாரமும் மேம்படுமென்று கூறினர்.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்குரிய நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சியை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வதென்றும் அதற்கான பொருளாதார உதவிகளை கீழக்கரை அனைத்து ஜமாத்துகள்,தனியார் அறக்கட்டளைகளிடம் கேட்டு பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்குரிய நிலம் வாங்குவதற்காக தன்னால் முடிந்த பொருளாதார உதவியை செய்வதாக கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான சீனா தானா(எ)செய்யது அப்துல்காதர் வாக்குறுதி வழங்கினார்.
இதற்காக கூட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேற்கொண்டு தேவைப்படும் பொருளாதார உதவியை மற்ற ஜமாத்துகளிடமும் கேட்டு பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழக்கரை தாலுகா துணை தாசில்தார் பரமசிவன், நகராட்சி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது நன்றி கூறினார்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.