சென்னை ஜூலை, 27
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்கி அடுத்த மாதம் 10-ம்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டில் கோவை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தடைந்தது. 40 நாட்களில் இந்தியாவில் 75 நகரங்களை கடந்து ஜோதி, செஸ் ஒலிம்பியாட் நடக்கும் மாமல்லபுரத்துக்கு வந்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளம் முழங்க அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னையை வலம் வர உள்ளது.