Spread the love

ஏப்ரல், 14

கோடை காலம் துவங்கி விட்டாலே நாம் நம்முடைய வீட்டு பிரிட்ஜில் எல்லா விதமான கூல்ட்ரிங்ஸ் கலவைகளையும் வாங்கி வைத்து விடுவோம். வெறும் காற்றை மட்டும் அடைத்து கொடுக்கும் கூல்ரிங்ஸ் குடிப்பதால் எந்த ஒரு நன்மையும் விளையப் போவது இல்லை. கூல் ட்ரிங்ஸ் குடிப்பதால் உடலுக்கு அந்த நேரத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துமே தவிர உண்மையில் அது மாறாக உடல் சூட்டை அதிகரிக்கச் செய்துவிடும்.

கோடைக்காலத்தில் ஜில்லென்று தண்ணீர் கட்டாயம் குடிக்க கூடாது.

தகிக்கும் அனல் வெயிலில் ஐஸ் வாட்டர் குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் இது உடலுக்குள் இருக்கும் சூட்டை அதிகரிக்கச் செய்யும் என்பது தான் உண்மை. இதனால் சிறுநீர் மஞ்சளாக போவது, நீர் கடுப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ரசாயன கலவைகள் கலந்த கூல்டிரிங்ஸ் குடிப்பதால் தலைவலி, தொண்டை புண், உஷ்ண பிரச்சினைகள், கண் எரிச்சல், சிறுநீரக பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே இதனை முற்றிலுமாக தவிர்த்து விடுவது மட்டுமே கோடை காலத்தில் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நன்மையாகும்.

இதற்கு மாற்றாக வீட்டிலேயே நல்ல விதமாக நாம் உடலை குளிர்ச்சி செய்யக் கூடிய பொருட்களை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. கோடைக்காலத்தில் பழங்கால கேழ்வரகு கூழ், கம்மங் கூழ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் சூட்டை தணித்து உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். மேலும் கிருமித் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். அது போல் நீர்மோர், பானை தண்ணீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், பாதாம் பிசின் போடப்பட்ட சர்பத் வகைகள், தற்பூசணி, விளாம்பழம், கிர்ணி, இளநீர் ஆகியவற்றை பருகுவது பல்வேறு நன்மைகளை நமக்கு தரும். மேலும் உடலை சூரியனின் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருந்து குளிர்ச்சியை நமக்கு தேக்கி வைத்துக் கொள்ள உதவும்.

இதில் நன்னாரி என்பது மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. நன்னாரி வேரில் உடலில் இருக்கும் வெப்பத்தை நீக்கி உறுதியான உடலமைப்பையும், வயிற்றிலிருக்கும் புண்கள் போன்றவற்றையும் ஆற்றும் ஆற்றல்களை கொண்டுள்ளது. நன்னாரி வாதம், பித்தம், பால்வினை நோய்கள் ஆகியவற்றை சரி செய்யும். மேலும் மூட்டுவலி, உடல் வெப்பம், சரும பாதிப்புகள், ஒற்றை தலைவலி போன்றவற்றிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்க செய்யும்.

கோடையில் சிறுநீரை பெருக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் வியர்வை சுரப்பை அதிகரிக்கச் செய்து உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை வெளியேற்றி உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் பேணிக் காக்கும் ஆற்றலும் கொண்டுள்ளது. நன்னாரி வேர் பயன்படுத்தி நேரடியாக செய்ய முடியாதவர்கள் நன்னாரி எசன்ஸ் வாங்கி சர்பத் கலந்து குடிக்கலாம். நன்னாரி எசன்ஸ் உடன், தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து மிதமான குளிர்ச்சியில் பருகினால் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து உடல் முழுமையாக குளிர்ச்சி அடையும். இந்த கோடையில் நன்னாரி சர்பத் பருகி அனைவரும் பயனடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *