நாமக்கல் ஜன, 18
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள 8 கிராம மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடவில்லை.
இங்குள்ள அத்தனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி உள்ள அத்தனூர், ஆயிபாளையம், கோம்பைக்காடு, அத்தனூர் புதூர், தட்டான் குட்டை புதூர், ஆலங்காடு புதூர், உடுப்பத்தான் புதூர், தாசன் புதூர் ஆகிய 8 கிராமங்களில் உள்ள மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடவில்லை.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம், விசைத் தறி, கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இந்த கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பண்டிகையை கொண்டாடியதாக கூறப்படுகிறது. கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியைச் சேர்ந்த நிலச்சுவான்தார் ஒருவர் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடினாராம்.
அப்போது அங்கு வசித்த பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனிடம் முறையிட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு அருள் வந்து, பொங்கல் பண்டிகை கொண்டாடியதால் தான் அம்மை நோய் தாக்கியதாக வாக்கு கூறியுள்ளார். இதனால் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டாம் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும், கால்நடைகள் நோயின்றி வாழ்வதற்காகவும் கடந்த 55 ஆண்டுகளாக, இந்த 8 கிராம மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை.